Suttachu Suttachu

ebook

By Sudhangan

cover image of Suttachu Suttachu

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

1967-ம் வருடம். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்ததாக ஞாபகம். அம்மாவின் தந்தையான தாத்தா திரு.வி.எஸ்.நாராயணன், தினமணி நாளிதழின் உதவி ஆசிரியராக இருந்தார். வளர்ந்தது பெரும்பாலும் தாத்தா, பாட்டி வீட்டில்தான்.

அந்த வீட்டில் வசித்தபோதுதான் ஒருநாள் மாலை திடீர் பரபரப்பு. எதிரே இருந்த டீக்கடை அவசர அவசரமாக மூடப்படுகிறது. சாரிசாரியாக மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் நோக்கி மக்கள் ஓடுகிறார்கள்.

ஒருவர் ஓடிவந்து பாட்டியிடம், "ஐயரூட்டம்மா.. எம்.ஜி.ஆரை சுட்டுட்டாங்களாம். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில சேத்துக்கறாங்களாம். கடையெல்லாம் மூடிட்டாங்க. உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு, இப்பவே வாங்கியாந்து கொடுத்திடறேன்" என்றார்.

பரபரப்பின் காரணம் அப்போதுதான் புரிந்தது. எங்களுடைய திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான ராயப்பேட்டை மருத்துவமனை, இப்பொழுது எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் திவ்ய க்ஷேத்திரமாகியது. காரணம், அவர்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அங்கே சிகிச்சை பெற்றதுதான்.

கூட்டத்தை வேடிக்கை பார்க்கத் துடிக்கும் ஒரு சிறுவனின் துடிப்பு. வீட்டில் பேசப்படுகிற, எழுகிற அரசியல் சர்ச்சைகளின் பாதிப்பு. அவ்வப்போது அப்பாவோடும் மாமாக்களோடும் பக்கத்து ஷேக் தாவூத் தெருவில் நடக்கும் தி.மு.க. கூட்டங்களுக்குப் போய், விவரம் புரியாமலே அவர்களின் வசீகரப் பேச்சில் வியந்து போன வயது. எல்லாமாகச் சேர்த்து சின்ன வயதில், ஏழுகடல், ஏழுகிணறு தாண்டி ராட்சஸனின் உயிரைத் தாங்கி நிற்கும் கிளிக்கதையை கேட்கிற ஆர்வம் மாதிரி, 'எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவத்தை'க் கேட்கிற ஆர்வம் என் பால உள்ளத்தில் விழுந்தது.

ராதா-வில்லன்; எம்.ஜி.ஆர்.-கதாநாயகன். கதாநாயகனை வில்லன் வீழ்த்தியதாக எந்த எம்.ஜி.ஆர். படத்தையும் பார்த்ததில்லை. "திரையில் கண்ட சர்வ வல்லமை படைத்த எம்.ஜி.ஆரை எப்படி வில்லன் ராதா சுட முடியும்?" சினிமா என்கிற நிழல் வேறு, நிஜம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர்., பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பசுபதி என்கிற காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டார். எம்.ஜி.ஆர். ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுப் போடப்பட்டிருந்தது. சட்டை இல்லாத வெறும் உடம்புடன், எம்.ஜி.ஆர். கைகூப்பியபடி வாக்குக் கேட்கும் சுவரொட்டிகள், தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.

தி.மு.க. பதவியேற்ற பிறகு 1968-ல் இருந்து எம்.ஜி.ஆரை, ராதா கொலை செய்ய முயன்ற வழக்கு விசாரணைக்கு வந்து, பிறகு 1969 வருடவாக்கில் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. அரசுத் தரப்பில் பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமன், பின்னாளில் நீதியரசராக ஓய்வுபெற்ற பி.ஆர்.கோகுல கிருஷ்ணனும், ராதாவுக்காக கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.

வழக்கின் சூடு பறக்கும் நீதிமன்ற வாக்குவாதங்கள், வழக்கு நடக்கும்போதெல்லாம் தினமணி நாளிதழில் வெளிவரும். படிக்கவே படு சுவாரசியமாக இருக்கும். ராதா சிறை சென்றார். எம்.ஜி.ஆர். மீண்டும் நடிக்க வந்து, தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சராகி 1987 டிசம்பர் 24 அன்று இயற்கை எய்தினார் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த கதை. நான் 1992 அக்டோபர் 1- ம் தேதி தினமணியில் பொறுப்பாசிரியராகச் சேர்ந்தேன்.

தினமணி கதிருக்கு ஒரு பரபரப்பான தொடர் தேவைப்பட்டது. சின்ன வயதில் சிந்துபாத் கதை மாதிரி தினமணியில் படித்த எம்.ஜி.ஆர்.-ராதா வழக்கு விசாரணை நினைவுக்கு வந்தது.

உடனே தினமணி நூலகம் ஓடினேன். 1967, 68, 69-ம் வருட தினமணி இதழ்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மூழ்கினேன். வழக்கின் தீர்ப்பு நகல்களை மிகுந்த சிரமப்பட்டுப் பெற்றேன்.

இதை எப்படிச் சொல்வது என்று யோசித்தபோதுதான், ஓர் உண்மைச் சம்பவத் தொடரில் ஒரு கற்பனை நிருபர் பாத்திரத்தை நுழைத்தேன். பரபரப்பானதொரு தொடர் கிடைத்தது. பதிவு செய்யப்பட்ட வழக்கு நகல்களை மட்டுமே எடுத்துக் கையாண்டேன்.

வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆர்.- எம்.ஆர்.ராதா இருவரும் உயிருடன் இல்லை. சம்பவ தினத்தன்று ராதாவுடன், எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் சென்ற தயாரிப்பாளர் வாசு (பெற்றால் தான் பிள்ளையா தயாரிப்பாளர்) உயிருடன் இல்லை. 'வழக்கு பற்றி தனக்குத் தெரியும்' என்று சொல்பவர்களின் பேச்சு எத்தனை ஆதாரபூர்வமாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் கோர்ட், எஃப்.ஐ.ஆர்., வாதப் பிரதிவாதங்கள், கீழ்-மேல் கோர்ட் தீர்ப்புகளை மட்டுமே வைத்து எழுதினேன்.

ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பதிவு செய்த திருப்தி எனக்கு....

Suttachu Suttachu